அரவக்குறிச்சி பகுதியில் உற்பத்தியாகும் செங்காந்தள் மலரின் விதையை கொள்முதல் நிலையம் அமைத்து அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் விவசாயிகள் அதிக அளவு வறட்சியை தாங்கி வளரக்கூடிய செங்காந்தள் செடியினை அதிகமாக பயிர் செய்து வருகின்றனர். உடலில் புற்று நோய் பரவாமல் தடுக்கும் கால்சிசின் எனும் வேதிப்பொருள் செங்காந்தளின் விதை மற்றும் கிழங்கில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் செங்காந்தள் செடியின் விதையை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த மருந்து நிறுவனங்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.
மேலும் செங்காந்தள் பாம்பு கடி, தேள் கடி போன்றவற்றுக்கு மருந்தாக பயன்பட்டு வருகிறது. இப்பகுதியில் 25 ஆயிரம் டன்னுக்கு மேல் விதை உற்பத்தி செய்யப்பட்டு நூறு கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெறுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இடைத்தரகர்கள் மூலம் வர்த்தகம் நடைபெறுவதால் விலை குறைவாகவே கிடைப்பதாகவும் செங்காந்தல் விதையை நேரடியாக கொள்முதல் செய்ய அரசு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.