இமாச்சலப் பிரதேசத்தில் பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இமயமலைப் பகுதியான இமாச்சலப் பிரதேசத்தில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பியாஸ், தான்ஸ் உள்ளிட்ட ஆறுகளில் கரைமீறிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரத்தில் நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், தேசியப் பேரிடர் மீட்புப் படை, மாநிலப் பேரிடர் மீட்புப் படை, இந்தோ திபெத் எல்லைக் காவல் படை ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்கள் மீட்புப் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். குலு, கின்னார், மண்டி மாவட்டங்களில் பலத்த மழையால் சாலைகளில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள குலு, சிம்லா மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்குத் திங்கட் கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.