தாமிரபரணி ஆற்றில் மூன்றாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வெள்ள அபாயம் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க கட்டணமில்லா எண்ணுடன் கட்டுப்பாட்டு அறை வசதி செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு வேண்டிய வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
தொடர் மழை காரணமாக டவுன் காட்சி மண்டபம் குறுக்குத்துறை சுப்பிரமணியசாமி கோயில், நெல்லை ஜங்ஷன் ஈரடுக்கு மேம்பாலம் கீழ்ப்பகுதி, சொரிமுத்து அய்யனார் கோயில் சுற்றிலும் மேலப்பாளையம் நத்தம் கருப்பந்துறை செல்லும் வழியில் உள்ள தாம்போதி பாலம் போன்றவை நீரில் மூழ்கின.
நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பாபநாசம் சேர்வலாறு குண்டாறு கடனா போன்ற அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. இதில் பாபநாசம் அணை நிரம்பிவிட்டதால் அணையில் இருந்து 14 ஆயிரத்து 260 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய பல்வேறு பயிற்சிகள் பெற்று 6,000 பேர் கொண்ட மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.