திருப்பூர் அருகே உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவிக்கு, ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பஞ்சலிங்க அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குருமலை, குழிப்பட்டி , ஜல்லிமுத்தான் பாறை பகுதிகளில் தற்சமயம் தொடர் மழை பெய்து வருவதால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பாதுகாப்புக் கருதி சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனையடுத்து திருமூர்த்தி மலைக்கு வந்திருந்த ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.