யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு- தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் டெல்லியில் ஆற்றங்கரையை ஒட்டிய தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதால் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அரியானா மாநிலம் ஹதினிகுண்ட் என்னுமிடத்தில் கட்டப்பட்டுள்ள அணை முழுக் கொள்ளளவை எட்டியது. அணையில் இருந்து வினாடிக்கு எட்டு லட்சத்து 28 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் யமுனை ஆற்றில் நீர்மட்டம் கடல் மட்டத்தில் இருந்து 203 மீட்டர் 37சென்டி மீட்டராக இருந்தது. இமாச்சலம், உத்தரக்கண்ட் மாநிலங்களில் திங்கட்கிழமையும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் யமுனை ஆற்றில் வெள்ளத்தின் அளவு தொடர்ந்து அதிகரிக்கும் எனப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் டெல்லியில் யமுனை ஆற்றங்கரையோரம் குடியிருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் குடியிருந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version