குமரி மாவட்டத்தில் நேற்றில் இருந்து சூறாவளி காற்றுடன் பெய்து வரும் கனமழையால் அணைகளில் நீர் வரத்து உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளிலும் பெய்து வரும் மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 48 அடி மொத்த கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45 அடியை எட்டியுள்ளது. இதனால் அணையில் இருந்து விநாடிக்கு 11 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்புகளை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனிடையே, பேச்சிப்பாறை அணையின் நீர்வெளியேற்றமும் அதிகரிக்கப்பட்டுள்ளதால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு பாய்கிறது.