கன்னியாகுமரியில் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகின்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு மாத இடைவெளிக்கு பிறகு நேற்று இரவு கனமழை பெய்தது.

நித்திரவிளை, களியக்காவிளை, குழித்துறை, மார்த்தாண்டம், குலசேகரம், புதுக்கடை, கருங்கல் உள்ளிட்ட பகுதிகளிலும், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மலையோர கிராமப் பகுதிகளிலும் கனமழை பெய்தது.

இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு ஒன்று, சிற்றாறு இரண்டு ஆகிய அணைகளில் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

இதில் பேச்சிப்பாறை மற்றும் சிற்றாறு ஒன்று அணைகளில் நீர் மட்டமானது அபாயகர அளவை கடந்து, உயர்ந்து வருவதால் அணைகளின் பாதுகாப்பை கருதி, பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி உபரி நீரும், சிற்றாறு 1 அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி உபரி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version