அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி கடந்த வியாழக்கிழமை உருவானது. இது படிப்படியாக வலுவடைந்து, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டிருந்தது. தற்போது புயலாக வலுப்பெற்று அமினி தீவுகளுக்கு வடக்கு, வடமேற்கு திசையில் 120 கி.மீ தொலைவிலும், கன்னூருக்கு மேற்கு வடமேற்கு திசையில் 300 கிலோமீட்டர் தெலைவிலும் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து தீவிர புயலாக மாறி வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து 18ம் தேதி குஜராத் கடற்பகுதிகளை நெருங்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரபிக் கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயலால் காரணமாக கேரளாவில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. பொங்கி எழுந்த கடல் அலைகள் ஊருக்குள் புகுந்ததால் கடலோரத்தில் வசிக்கும் கிராம மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
டவ்-தே புயல் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசி வருகிறது. சீற்றத்துடள் வெளியேறும் கடல் நீர் புகுந்துள்ளதால், கடலோர கிராமங்கள் தண்ணீரில் மிதக்கின்றன.