தாம் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுவது வதந்தி என்றும், தான் வெளிநாட்டுக்குச் செல்லவில்லை எனவும் கல்கி எனப்படும் சாமியார் விளக்கமளித்துள்ளார்.
தன்னைக் கல்கி அவதாரம் எனக் கூறிக்கொள்ளும் சாமியார் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வரதப்பாளையத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு, கர்நாடகம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு ஆசிரமங்களை நடத்தி வருகிறார். இவரது ஆசிரமத்துக்கு வரும் வருமானத்தைக் கணக்கில் காட்டவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் 4 மாநிலங்களிலும் கல்கியின் ஆசிரமங்கள், அவர் மகன் கிருஷ்ணாவுக்குச் சொந்தமான இடங்கள் என நாற்பது இடங்களில் 4 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் 44 கோடி ரூபாய் பணமும், 26 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
18 கோடிரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களும் கைப்பற்றப்பட்டன. இந்தச் சோதனையில் சுமார் 500 கோடி ரூபாய் அளவுக்குக் கணக்கில் காட்டாத சொத்துக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்துக் கல்கியின் மகன் கிருஷ்ணா, மருமகள் பிரீத்தி ஆகியோரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில் கல்கியையும் அவர் மனைவியையும் காணவில்லை என்றும் அவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தான் பூவிருந்தவல்லி அருகே நேமத்தில் உள்ள ஆசிரமத்தில் உள்ளதாகவும், வெளிநாட்டக்குத் தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுவது வதந்தி என்றும் கல்கி விளக்கமளித்துள்ளார்.