உயர்மின் அழுத்த இணைப்பை துண்டிக்காமல் பழுதை சரிசெய்ய உபகரணங்கள்:நவீனமயமாகும் மின்துறை

உயர்மின்னழுத்தம் பாயும் மின்வழித்தடங்களில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், மின் இணைப்பை துண்டிக்காமலேயே பழுது நீக்கும் பணியை மேற்கொள்வதற்கு நவீன உபகரணங்களை மின் துறைக்கு வழங்கி தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

உயர்மின்னழுத்தம் பாயும் மின்வழித்தடங்களில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அவற்றின் மின் இணைப்பை துண்டித்து மட்டுமே சிக்கலை சரிசெய்ய முடியும் என்ற நிலையே இதுவரை இருந்து வந்தது.

அப்போது, மின் தடத்தின் எந்த இடத்தில் சிக்கல் என்று அறிய ஓரிரு மணி நேரங்களும், பழுதை சரி செய்ய நான்கு ஐந்து மணி நேரங்களும் பொதுவாகத் தேவைப்பட்டன. இதனால் மின் பழுதால் பாதிக்கப்பட்ட ஒரு மின்வழித்தடத்தால் பயனடையும் மக்கள், நீண்ட நேரம் மின்சாரம் இல்லாமல் இருக்க நேர்ந்தது. இந்த நேரத்தில் மின் துறையின் ஊழியர்கள் தங்கள் உயிரைப் பணையம் வைத்து, மின்பழுதை சரி செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் எதிர்க்கட்சிகள் உள்ளிட்டவர்களோ ‘இது மின் தடை’ என்று மக்களிடம் பொய்த் தகவலைப் பரப்புவார்கள்.

இனி இந்த சூழ்நிலை ஏற்படாமல் இருக்க ஒரு நீண்டகாலத் தீர்வை தமிழக மின் துறை கண்டறிந்து உள்ளது. அந்தத் தீர்வுதான் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மின்சாரம் பாயாத, சிந்தெடிக் மற்றும் ஸ்டெயின்லெஸ் ரக உடை. இந்த தரமான உடையை அணிந்துள்ள நபர் 400 மெகாவாட் உயர்மின்னழுத்தம் உள்ள மின்வழித்தடத்தில் கூட, பாதுகாப்பாக பணியாற்ற முடியும். பழுது நீக்கும் போது மின் இணைப்பை துண்டிக்க வேண்டியது இல்லை என்பதால் மக்களும் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட மாட்டார்கள்.

4 லட்சம் ரூபாய் மதிப்புடைய இந்த பாதுகாப்பு உடையை, தமிழக அரசு மின் துறையில் புதிதாக அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த உடையை அணிந்து பழுது நீக்கும் பணியில் ஈடுபடுவதற்காக, ஹாட்லைன் டீம் என்று அழைக்கப்படும் 160 பேருக்கு பெங்களூருவில் பயிற்சியும் அளிக்கப்பட்டு உள்ளது.

மின்வழித் தடத்தில் பழுது நீக்கும் ஊழியர்கள், மிக அதிக மின்னழுத்தம் உள்ள கம்பிகளைக் கையாள, அவர்களுக்கு அதீத மனவலிமை தேவை. எனவே அவர்களுக்கு உரிய மனவலிமைப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு உள்ளன. மேலும் இவர்கள் ஒவ்வொருவருக்கும் அரசின் சார்பில் 15 லட்சம் ரூபாய் கூடுதல் உயிர்காப்பீடும் செய்யப்பட்டு உள்ளது. தற்போது பரிசோதனை முயற்சியாக சென்னையில் இது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. விரைவில் தமிழகம் முழுவதும் இந்த முறை பின்பற்றப்படும். அப்போது எவ்வளவு பெரிய மின்னிணைப்புப் பழுதாக இருந்தாலும், அது 30 நிமிடங்களுக்குள் சரி செய்யப்படும்.

மேலும் இந்த ஆடை வேறுபல வழிகளிலும் தமிழக மின்துறையை மேம்படுத்தும். உதாரணமாக, மின்கோபுரங்களில் பயன்படும் இன்சுலேட்டர் எனப்படும் மின்சாதனம் பொதுவாக பீங்கானால் உருவாக்கப்பட்டதாக உள்ளது. இந்த இன்சுலேட்டர் மீது தூசு படிந்தால் மழைக்காலத்திலும், வெயில் காலத்திலும் இன்சுலேட்டர் விரிசல் விட்டுவிடும். இதனால் மின் விநியோகம் பாதிக்கப்படும். ஆனால் இன்சுலேட்டர்கள் ஹாட்வாஷ் முறையில் தூய்மை செய்ய மின் இணைப்பை துண்டிக்கவும் முடியாது. ஆனால் இந்த புதிய பாதுகாப்பு உடையால் மின்சாரம் செல்லும் போதே இன்சுலேட்டரை தூய்மை செய்ய முடியும். இப்போது மின் பழுதுகளும் குறையும்.

இந்தப் பாதுகாப்பு உடை தவிர, ஒரு ட்ரோன் ஒன்றும் பழுது நீக்கப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட உள்ளது. இத ட்ரோன் 3 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள பகுதிகளுக்குச் சென்று, அங்கு எந்த இடத்தில் மின் பழுது ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறியும். இதனால் பழுதைக் கண்டறிய செலவிடும் நேரமும் வெகுவாகக் குறையும். தமிழக மின்துறை தனது புதிய தொழில்நுட்பங்களை செயல்முறை விளக்கமாக செய்து காட்டியது. இதில் 400 கிலோவாட் மின்சாரம் பாயும் உயர்மின்னழுத்த மின் தடத்தை, பாதுகாப்பு உடை அணிந்த ஊழியர்கள் மின் இணைப்பை துண்டிக்காமலேயே தூய்மை செய்து காட்டினார். இந்தக் காட்சி அனைவரையும் வியக்க வைத்தது.

Exit mobile version