டெல்லியில் சிஏஏவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் 5 பேர் உயிரிழப்பு

டெல்லியில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் தலைமைக் காவலர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

டெல்லி ஜாஃப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக  கடந்த சனிக்கிழமை இரவு போராட்டம் தொடங்கியது. இதற்கு பதிலடியாக, சிஏஏவுக்கு ஆதராக ஜாஃப்ராபாத் அருகே, மவுஜ்பூர் பகுதியில் போராட்டம் நடத்தப்பட்டது.

அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல், நேற்று கலவரமாக மாறியது. ஜாஃப்ராபாத், பஜன்புரா, சந்த்பாக் போன்ற பகுதிகளில் வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. ஒருவரையொருவர் கல்வீசி தாக்கிக்கொண்டதில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரத்தன் லால் என்ற தலைமைக் காவலர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.

மேலும், போராட்டக் காரர்கள் 4 பேர் பலியாயினர். காவலர்கள் மற்றும் துணை ராணுவப்படையினர் உட்பட சுமார் 60 பேர் படுகாயமடைந்தனர். இந்தநிலையில், டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version