ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று டெல்லியில் சிபிஐ அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று அவர் டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சிபிஐ நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்காக ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். இதையடுத்து ப.சிதம்பரம் தரப்பில் கபில் சிபில் மற்றும் அபிஷேக் சிங்வி ஆகிய வழக்கறிஞர்கள் வாதாடினர். சிபிஐ தரப்பில் வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதாடினார். இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை அரை மணி நேரத்திற்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அஜய் குமார் குஹர் தெரிவித்தார். பின்னர் மாலை 6.40 மணிக்கு தீர்ப்பளித்த நீதிபதி, ப.சிதம்பரத்தை வரும் 26 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். மேலும், ஒவ்வொரு நாளும் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் 30 நிமிடங்கள் ப.சிதம்பரத்தை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.