இராமநாதபுரத்தில் 12 நாட்களுக்குப் பிறகு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள்

இராமநாதபுரம் மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கடந்த மாதம் 31ஆம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச்செல்ல அரசு தடைவிதித்திருந்தது. இதனால், ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், ஏர்வாடி, கீழக்கரை, முந்தல், மாரியூர், மூக்கையூர், வாலிநோக்கம் ஆகிய ஊர்களில் ஆயிரக்கணக்கான படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் பல கோடி ரூபாய் வணிகம் பாதிக்கப்பட்டதுடன் மீன்பிடித் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்தனர்.

இந்நிலையில் காற்றின் வேகம் குறைந்ததால், இன்று வழக்கம் போல மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அனுமதிச்சீட்டுப் பெற்று 50ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதனால் 12 நாட்களாக வெறிச்சோடிக் காணப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் மீண்டும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியுள்ளன.

Exit mobile version