ராமேஸ்வரத்தில் மீனவர்கள் 2வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
60 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் முடிந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று திரும்பினர். இந்நிலையில் தனியார் மீன் கொள்முதல் நிறுவனங்கள் கூட்டாக சேர்ந்து கொண்டு, மீன்களுக்கு உரிய விலை வழங்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, மீன்களுக்கு உரிய விலை கிடைக்க வலியுறுத்தியும், நியாயமான விலையில் ஐஸ்கட்டிகள் விற்பனை செய்யக்கோரியும், ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் 2வது நாளாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சுமார் 850க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. வேலைநிறுத்தத்தால் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்பிடித் தொழிலாளர்கள் மற்றும் சார்பு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதனால், நாளொன்றுக்கு சுமார் 2 கோடி ரூபாய் வரை வர்த்தம் பாதிப்பு அடையும் என கூறப்படுகிறது.