ராமேஸ்வரம், சங்குமால் துறைமுகங்களில் கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அதிர்ச்சி

ராமேஸ்வரம் மற்றும் சங்குமால் துறைமுகங்களில் கடல் திடீரென உள்வாங்கியதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தனுஷ்கோடி, ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய கடலோர பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக சூறைகாற்று வீசி வரும் நிலையில் இன்று காலை ராமேஸ்வரம் மற்றும் சங்குமால் துறைமுகப் பகுதிகளில், கடல் திடீரென 100 மீட்டருக்கும் மேல் உள்வாங்கியது. இதனால் மீனவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. பலத்த வேகத்தில் காற்று வீசி வருவதால், மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் சுமார் ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல், தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்துடன் புழுதி புயல் வீசி வருவதால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக தனுஷ்கோடிக்கு தெற்கே மன்னார் வளைகுடா கடற்பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் ஏற்படும் புழுதி புயலால் இந்திய எல்லை பகுதியான அரிச்சல்முனை கடற்கரை சாலை மணலால் மூடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். புழுதி புயலால் சாலையில் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காற்றின் வேகம் காரணமாக பாம்பன் பாலம் வழியாக செல்லும் ரயில்கள் அனைத்தும் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

Exit mobile version