மீன்பிடி தடைக்காலத்திலும் பராமரிப்பு பணியில் ஈடுபடும் மீனவர்கள்

மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளதால், படகுகள், வலைகளை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்…

கோடை காலங்களான ஏப்ரல், மே ஆகிய மாதங்களில்தான், மீன்களின் இனப்பெருக்கம் அதிகம் நடைபெறும். இக்காலங்களில் மீன்கள் ஆழ்கடலில் முட்டையிட்டு, குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும். அந்த நேரத்தில், மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும்போது, படகுகள் மற்றும் வலைகளில் சிக்கி மீன்குஞ்சுகள் அழியும் நிலை ஏற்படும். இதனை தடுக்கும் வகையில், கடந்த 1983ம் ஆண்டு, தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை, 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், 45 நாட்கள் தடைகாலத்தில் குறைந்த அளவே மீன்களின் இனப்பெருக்கம் நடைபெற்றதன் காரணமாக, தற்போது மீன்பிடி தடைக்காலத்தை தமிழக அரசு 61 நாட்களாக உயர்த்தி அறிவித்து செயல்படுத்திவருகிறது. அதன்படி, இந்தாண்டு மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15ம் தேதிமுதல் தொடங்கியது. இந்த தடைகாலத்தில் விசைப்படகு, இழுவை படகு மீனவர்கள் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால், அந்த நாட்களில் மீனவர்கள் தங்கள் படகுகளை சீரமைத்தல், இயந்திரங்களை பராமரித்தல், படகுகளுக்கு வண்ணம் தீட்டுவது, வலைகளை பின்னுதல் போன்ற பணிகளை மேற்கொள்வர். அதன்படி, சென்னை காசிமேடு கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள படகுகளை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மீன்பிடி தடைகாலத்தில் தினக் கூலி வேலைகளுக்கும் செல்ல முடியாத சூழலால், மீனவர்களுக்கு வழங்க கூடிய 5ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை உயர்த்தி கொடுத்தால் தங்களது வாழ்வாதாரத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version