கஜா புயல் எதிரொலி கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் – தமிழக மீன்வளத்துறை எச்சரிக்கை

கஜா புயல் காரணமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தமிழக மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழக மீன்வளத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அனைத்து கடலோர மற்றும் உள்நாட்டு மீன்வளத்துறை இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் மற்றும் மீன்துறை உதவி இயக்குநர்களுக்கு கஜா புயல் தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடலுக்குள் சென்ற மீனவர்கள் பத்திரமாக கரை திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கப்பல்படை அதிகாரிகளுக்கு, மீன்பிடி படகுகள் பத்திரமாக கரைக்கு திரும்பிட தகவல் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து கடலோர இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களுக்கும் அனைத்து மீன்பிடி படகுகளும் பத்திரமாக மீன்பிடி துறைமுகம், மீன் இறங்கு தளங்களில் நிறுத்திடவும், மீன்பிடி கலன்களை பத்திரமாக கரைக்கு கொண்டு சேர்த்திடவும் தகுந்த அறிவுரைகளை வழங்கப்பட்டுள்ளது.

மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள ஏதுவாக நீச்சல் வீரர்கள் மற்றும் படகு உரிமையாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version