ஃபானி புயல், மற்றும் மீன் பிடித்தடை காலம் போன்ற காரணங்களால் நாகை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
மீன் பிடி தடை காலம் கடந்த 15ஆம் தேதி தொடங்கிய நிலையில், விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பைபர் படகு மீனவர்கள் கரையோரங்களில் மீன்பிடித்து வந்தனர். இந்தநிலையில் வங்கக் கடலில் உருவான ஃபானி புயல் எச்சரிக்கை காரணமாக பைபர் படகு மீனவர்களுக்கும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மாவட்ட மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. இதனால், நாகையில் மீன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆறு, ஏரி குளங்கள் மற்றும் பண்ணைகளிலிருந்து பிடித்து வரப்படும் மீன்கள் நாகை அண்ணா சிலை அருகே உள்ள பாரதி மார்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. கெண்டை, விரால், வளர்ப்பு இறால், உள்ளிட்ட மீன்கள் கும்பகோணத்திலிருந்தும், கிழங்கா, உள்ளிட்ட மீன் வகைகள் கேரளாவிலிருந்து விற்பனைக்கு வருவதால், மீன்கள் விலை அதிகரித்துள்ளது. மேலும் இந்த மீன்களும் விரைவாக விற்று விடுவதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.