திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் குளங்களில் மீன்கள் இறந்ததற்கு திடீர் மழை காரணமாக ஏற்பட்ட வெப்ப மாற்றம் காரணமாக இருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்த குளம் மற்றும் சிவகங்கை தீர்த்தக் குளம் ஆகிய இரண்டு குளங்களில் உள்ள பெரும்பாலான மீன்கள் அண்மையில் செத்து மிதந்தன. இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்திய நிலையில் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கோயிலில் உள்ள இரண்டு குளங்களிலும் ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த திடீர் மழை காரணமாக தண்ணீரில் ஏற்பட்ட வெப்ப மாற்றத்தின் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் மேலும் ஆய்வுக்காக தண்ணீர் எடுக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.