இந்தியாவிலேயே முதன்முதலாக வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை ஒருவருக்கு நீதிமன்றம் மற்றும் மனித உரிமை ஆணையம் ஆகியவற்றின் உத்தரவின்பேரில் வேலூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மருத்துவ செவிலியராக பயில உத்தரவு வழங்கப்பட்டுள்ளது .அதனடிப்படையில் அந்த திருநங்கை இன்று மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் அதற்கான உத்தரவை காண்பித்து சேர்ந்துள்ளார்.
வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அருகே உள்ள புளியங்கண்ணு கிராமத்தைச் சேர்ந்தவர் திருநங்கை எஸ்.தமிழ்ச்செல்வி. இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் 74 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தார். இதை தொடர்ந்து திருநங்கை எஸ்.தமிழ்ச்செல்வி வேலூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் 2018-19-ஆம் கல்வி ஆண்டில் செவிலியர் பட்டயப் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பித்தார்.
ஆனால், செவிலியர் படிப்பில் திருநங்கைகள் சேருவதற்கு சட்டத்தில் இடமில்லை எனக் கூறி மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தமிழ்ச்செல்வியின் விண்ணப்பத்தை நிராகரித்தது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்ச்செல்வி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழ்ச்செல்விக்கு செவிலியர் பட்டயப் படிப்பில் இடம் ஒதுக்க உத்தரவிட்டது. இருப்பினும், தமிழ்ச்செல்வியை சேர்த்துக் கொள்ள மருத்துவக் கல்வி இயக்ககம் மறுத்துவிட்டது. இதுதொடர்பாக சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தமிழ்ச்செல்வி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன், திருநங்கை என்பதற்காக தமிழ்ச்செல்வியின் கல்வி உரிமையை மறுப்பது மனித உரிமை மீறலாகும். எனவே, தமிழ்ச்செல்வி விவகாரத்தில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி அவர் செவிலியர் படிப்பு படிப்பதற்கான உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். மேலும், 2018-19-ஆம் கல்வி ஆண்டிலேயே வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் பட்டயப் படிப்பில் தமிழ்ச்செல்விக்கு இடம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையடுத்து, சென்னையில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககம் தமிழ்ச்செல்விக்கு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர் பட்டயப் படிப்பில் இடம் ஒதுக்கீடு செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. இன்று மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் அதற்கான உத்தரவை காண்பித்து திருநங்கை எஸ்.தமிழ்ச்செல்வி சேர்ந்துள்ளார்.