நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி: இந்தியா நிதான ஆட்டம்

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி நிதானமாக ஆடி வருகின்றது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் போட்டித் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்த இந்திய அணி ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இந்த நிலையில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று நியூசிலாந்தின் வெலிங்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்திய அணியில் விராட் கோலி, அஜிங்க்ய ரகானே, பிரித்வி ஷா, மயங்க் அகர்வால், சத்தீஷ்வர் புஜாரா, ஹனுமா விகாரி, ரிஷப் பண்ட், அஸ்வின், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். நியூசிலாந்து அணியில், டாம் லாதம், டாம் பிளண்டெல், கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், வாட்லிங்க், கிராண்ட் ஹோம், ஜேமிசன், டிம் சவுதி, அஜாஸ் படேல், ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் விளையாடுகின்றனர்.

காலை 4 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதை அடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷாவும், மயங்க் அகர்வாலும் களம் இறங்கினர்.

பிரித்வி ஷா 16 ரன்கள் எடுத்திருந்த போது, டிம் சவுதி வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இதை தொடர்ந்து, மயங்க் அகர்வாலுடன் சத்தீஷ்வர் புஜார ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், ஜேமிசன் வீசிய பந்தில் அவர் ஆட்டமிழந்தார். 42 பந்துகளை சந்தித்த அவர் 11 ரன்கள் சேர்த்திருந்தார். இதை அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி, 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இந்த நிலையில், தற்போது இந்திய அணி மேலும் விக்கெட்டுக்களை இழக்காமல் இருக்க நிதானமாக ஆடி வருகிறது.

Exit mobile version