முதல் ஒருநாள் போட்டி: இந்திய அணி வெற்றி… கேதார் ஜாதவ் அசத்தல்…

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ஆரோன் ஃபின்ச், உஸ்மான் கவாஜா களமிறங்கினார்கள். இந்நிலையில், வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வீசிய இரண்டாவது ஓவரின் 3-வது பந்தில் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஃபின்ச் வெளியேறினார்.

இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இறுதியில் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய அணி 237 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் குவாஜா அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்தார். 100-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபின்ச், ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறி உள்ளார்.

237 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேதார் ஜாதவ் 81 ரன்கள் எடுத்தார். டோனி 59 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து இந்திய அணி 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இன்றைய ஆட்டத்தில் ஆல் ரவுண்டராக ஜொலித்த கேதார் ஜாதவ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Exit mobile version