முதல் ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணிக்கு 348 ரன்களை இந்தியா இலக்காக நிர்ணயித்துள்ளது.
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் போட்டியில், 5க்கு 0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்தது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி, ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிரித்வி ஷா 20 ரன்னிலும், மாயங்க அகர்வால் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நிலைத்து நின்று விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர், சர்வதேச ஒரு நாள் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். ஸ்ரேயாஸ் ஐயர், 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுபக்கம் நிலைத்து நின்று விளையாடிய கே.எல். ராகுல் 64 பந்துகளில் 88 ரன்கள் விளாசினார். கேதார் ஜாதவ் 26 ரன்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது.