தமிழகத்தில் அடுத்த புரட்சி – இந்தியாவின் முதல் சாதி மதமற்ற பெண்

புரட்சிக்கு மட்டும் ஒருபோதும் தமிழகத்தில் குறை இருந்ததே இல்லை. எல்லாம் ஒன்று. எல்லோரும் ஒன்று . ஒன்றே குலம் என்ற சமுகக்கட்டுப்பாட்டை உடைத்த ஒரு புரட்சிதான் தொழில்வாரியாக மனிதன் பிரிந்துகொண்டு சாதியாகி நின்றதுதான் கூடி வாழும் அமைப்பின் முதல் புரட்சி.

எந்த ஒன்றும் எல்லை மீறும்போது இயற்கை தானாகவே அதை சமன்செய்யும். சாதியும் அப்படித்தான். சாதியில்லாத சமூகம் – சாதிய சமூகம் – சாதி உச்சமுற்ற சமூகம் – மீண்டும் சாதிகளில்லா சமூகம் என இந்த சுழற்சி இப்போது தொடங்கியிருக்கிறது.

இந்தியாவில் முதல் முறையாக சாதியுமில்லாத, மதமுமில்லாத ஒருவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறார் ஒரு பெண்.

ஆனந்தகிருஷ்ணன்- மணிமொழி என்ற  சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியரின் மூத்த மகளான இவருக்கு சிறையில் உயிர் நீத்த போராளி சிநேகலதா நினைவாக சிநேகா என அவரது பெற்றோர் பெயரிட்டனர். அம்மாவின் முதல் எழுத்தை முதலிலும், அடுத்தது அப்பாவின் முதல் எழுத்து என ம.ஆ.சிநேகா ஆனார். 

லட்சியங்கள் வெறும் கனவுகளல்ல. போராடினால் சமூக மாற்றம் சட்டங்களாகும். என முழங்கும் ம.ஆ.சிநேகா தான் ஒரு சாதி மதம் அற்றவரென அரசு சான்றிதழ் பெற்ற முதல் இந்தியர் என்பதில் பெருமை கொள்கிறார்.

சாதிய அமைப்பிற்கு அடையாளமாக இருக்கும் சாதி சான்றிதழ் போல், சாதி மதம் அற்றவர் என்ற வாழ்விற்கு ஒரு அடையாளமாக ஒரு சான்று வேண்டும் என முடிவு செய்து அதற்காக முயற்சித்தார்..

ஆனால், என்ன சாதி என்று சொல்லவே எங்களுக்கு உரிமை உண்டு, சாதி இல்லை மதம் இல்லை என சொல்ல எங்களுக்கு அதிகாரம் இல்லை என பல முறை மறுப்பு தெரிவிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன.

தன் தொடர் முயற்சிகளால் இப்போது வென்றிருக்கும் இவர் இந்தியாவின் இத்தனையாண்டுகால பிரச்சினைக்கு ஒரு தீர்வு சொல்லியிருக்கிறார் என்றுதான் படுகிறது. 

தான் இப்படி ஒரு அடையாள மாற்றத்தை அடைந்ததோடு மட்டுமன்றி தன் பிள்ளைகளின் அடையாளத்தையும் அதே பாணியில்தான் வடிவமைத்திருக்கிறார். கணவர் கி.பார்த்திபராஜாவும் இவரும் ஆதிரை நஸ்ரீன்,  ஆதிலா ஐரீன்,  ஆரிபா ஜெசி என தங்கள் மகள்களுக்கு பெயர்கள் இட்டு அடையாளங்கள் இல்லாமல் வளர்த்து வருகின்றனர்.

இந்த புரட்சிகரமான சான்றிதழை அளிக்க பரிந்துரை செய்த திருப்பத்தூர் சார் ஆட்சியர் திருமிகு.பிரியங்கா பங்கஜம் அவர்கள், சான்றளித்த திருப்பத்தூர் வட்டாட்சியர் திருமிகு.சத்தியமூர்த்தி அவர்கள், அனைத்து விதங்களிலும் பேருதவியாக இருந்த தோழர்.அறவேந்தன் அவர்கள் உள்ளிட்டோர்க்கு உளமார நன்றி சொல்லும் இவருக்கு நாமுமொரு நன்றி சொல்லத்தான் வேண்டும்.

எல்லா மாற்றங்களுக்கும் ஒரு வீரியமான தொடக்கப்புள்ளி உண்டு. இப்போது குறித்துவைத்துக் கொள்ளுங்கள். எதிர்காலம் காணவிருக்கும் ஒரு பெரும்புரட்சிக்கான விதை விதைத்த இந்தப் பெண் எல்லோராலும் வயதுபேதமைன்றி மரியாதை செய்யப்படவேண்டியவள்.

இந்த அக்கினிக்குஞ்சு அகலவிரிந்து அதிகாரம் செய்யும் இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சாதியக்காட்டின் மூத்தமரத்து பொந்துக்குள் வைக்கப்பட்டிருக்கிறது. இனி வெந்து தணிவதை வேடிக்கை பாருங்கள். வெல்லட்டும் அவர் வியூகம். 

Exit mobile version