2020ம் ஆண்டின் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி, கோவையை சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மருத்துவர்கள் குழு சுமார் 5 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்ததாகவும், 2009 முதல் இதுவரை 11 இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி தெரிவித்தார். மூளைச்சாவு அடைந்த நபரிடம் இருந்து தானமாக பெறப்பட்ட இருதயம், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் எலும்புகள், மகேந்திரனுக்கு பொருத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த அறுவை சிகிச்சை முழுவதுமாக முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலமே செய்யப்பட்டதாகவும், தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைக்கு 40 முதல் 50 லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனவும் மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி தெரிவித்தார்.