மதுரை டிவிஎஸ் நகரை சேர்ந்தவர்கள் சுப்பையா, கிருஷ்ணவேணி தம்பதியினர். இருவரும் கவுண்டன்பட்டியில் உள்ள அவர்களின் விவசாய தோட்டத்தில் இருக்கும் கோவிலில் பௌர்ணமி தின வழிபாடு செய்துகொண்டிருந்தனர். அப்போது இரண்டு கார்களில் வந்த 5பேர் கொண்ட கும்பல் ஒன்று நாங்கள் வருமான வரித்துறையில் இருந்து வருகின்றோம். காரில் கமிஷ்னர் இருக்கின்றார் எங்களுடன் வாருங்கள் என கூறியுள்ளனர்.
தம்பதிகள் வர மறுக்கவே, அவர்களை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக் கொண்டு சென்றது அந்த கும்பல். இதை பக்கத்து தோட்டத்தில் உள்ள ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து வெளிநாட்டில் இருக்கும் அவர்களது மகனுக்கு அனுப்பி வைத்தார். இதற்கிடையில் கடத்தப்பட்ட தம்பதியிடம் 5 லட்சம் கொடுத்தால் நாங்கள் உங்களை விடுவிக்கிறோம், உங்கள் மேல் வருமான வரித்துறை வழக்கு பாயாது என தெரிவித்துள்ளனர் கடத்தல் பேர்வழிகள். உஷாரான சுப்பையாக, சரி நீங்கள் வருமான வரிதுறைதான் என்பதற்கான அத்தாச்சி என்ன, உங்கள் ஐடி கார்டை காட்டுங்கள் என குறுக்கு மறுக்காக கேள்விகளை எழுப்பினார். அரண்டு போன அந்த கும்பல் உசிலம்பட்டி விலக்கு பகுதியில் தம்பதி இருவரையும் இறக்கிவிட்டு சென்றுவிட்டனர். சுப்பையா கல்லுப்பட்டி காவல்நிலையத்தில், தான் கடத்தப்பட்ட விவரத்தை கூறி புகார் தெரிவித்தார். ஆனால், இந்த கடத்தல் புகாருக்கு பின்னால் வாய்ப்பேச்சில் வந்த ஒரு தகவல்தான் காரணமாக இருந்துள்ளது.
போலீசார் தங்கள் விசாரணையை துவக்கிய நிலையில் வெளிநாட்டில் இருக்கும் சுப்பையாவின் மகன், தன் அப்பாவின் நண்பரான கார்த்திகேயனிடம் சுப்பையாவை கடத்திய வீடியோவை அனுப்பினார். இதைப் பார்த்த கார்த்திகேயன், தன் வீட்டில் வேலை செய்யும் சாந்தியிடம் அதை காண்பித்துள்ளார். அதைப் பார்த்தா சாந்தி, இந்த கடத்தல் காரர்கள் தனக்கு தெரிந்தவர்கள் தான் என கூற, அதிர்ச்சயடைந்த கார்த்திகேயன் சுப்பையாவிடமும், கல்லுப்பட்டி காவல்நிலையத்திலும் விவரத்தை தெரிவித்துள்ளார். சாந்தி கொடுத்த தகவல்படி காவல்துறையினர், சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த முருகன்,சபரி, புகழ் ஹரிஸ், ஈஷாக் அகமது, முகமது ஜாகிர் உசேன், பாலமுருகன், தினேஷ்குமார்,ரிஷிகுமார் ஆகியோரை கைது செய்தனர்.
போலீசார் சாந்தியிடம் விசாரித்த போதுதான் கடத்தல்காரர்கள் யார் என்ற குட்டு வெளிப்பட்டது. சாந்தி வசிக்கும் சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் நிலத்தரகர் முருகன். சாந்தியிடம் தொழிலில் இழப்பு ஏற்பட்டதாக கூறி, சில லட்சங்கள் பணம் தேவைப்படுகிறது, யாரிடமாவது ஏற்பாடு செய்ய முடியுமா என கேட்டிருக்கிறார். அதற்கு சாந்தி, தன் முதலாளி கார்த்திகேயனிடம் விசாரித்து சொல்கிறேன் என கூறனார். கார்த்திகேயனிடம் கடன் கேட்டபோது, தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த தன் நண்பர் சுப்பையா, தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்தவர், அவரது மனைவி அரசுப்பள்ளியில் தலைமையாசிரியர் என்பதால் அவர்களிடம் பணப்புழக்கம் அதிகம். அவர்களிடம் கேட்டு பாருங்கள் என கூறினார்.
உடனே சாந்தி, முருகனிடம் இந்த தகவலை கூற, அவர் தன் நண்பர்களோடு சேர்ந்து சுப்பையாவை கடத்தி பணம் கேட்டுள்ளனர் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும், இவர்களுக்கு கடத்தல் தொழில் ஈடுபடுவது இதுவே முதல் முறை என்பதும் விசாரணையில் வெளிவந்தது. பின்னர் கடத்தல் கும்பலை சேர்ந்த 8 பேரையும் கைது செய்த போலீசார், பணம் பற்றிய தகவலை கொடுத்து உதவியதற்காக சாந்தியையும் கைது செய்தனர்.