உச்ச நீதிமன்ற நிபந்தனைகளால் சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. பட்டாசு வெடிப்பதால் சுற்றுப்புற சூழல் மாசு அடைவதாக தொடரப்பட்ட வழக்கில், பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு சில நிபந்தனைகளை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டது. தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்தனர்.
இந்நிலையில், சிவகாசி அருகே உள்ள விஸ்வநாத்தம் பகுதியைச் சேர்ந்த பட்டாசு தொழிலாளியான செல்லச்சாமி காவி உடை அணிந்து பிச்சை எடுக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதே நிலை நீடித்தால் தனக்கு ஏற்பட்டுள்ள நிலை, அனைத்து தொழிலாளர்களுக்கும் வரும் என தெரிவித்தார். மீன் பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு நிதி உதவி அளிப்பது போல, பட்டாசு தொழிலாளர்களுக்கு உரிய நிதி வழங்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செல்லச்சாமி கோரிக்கை விடுத்தார்.