தீபாவளி முன்னெச்சரிக்கை – என்ன செய்ய வேண்டும்?… என்ன செய்ய கூடாது? 

 

 

பட்டாசு வெடிக்கும் முன்…

உரிமம் பெற்ற கடைகளில் மட்டும் பட்டாசுகளை வாங்குங்கள். போலிப் பட்டாசுகள் ஆபத்தானவை.
பட்டாசுகளைக் கொளுத்தும்போது, தளர்வான ஆடைகளை உடுத்த வேண்டாம். இவை தீப்பற்றக் காரணமாக அமையலாம்.
டெரிகாட்டன்/டெரிலின் போன்ற எளிதில் தீப்பற்றும் ஆடைகளைத் தவிருங்கள். தடித்த பருத்தி ஆடைகள் அணிவது நலம்.
வெடிகளை கையில் வைத்தோ, அருகில் வைத்தோ வெடிக்க வேண்டாம். பாதுகாப்பான தொலைவில் இருந்து வெடிக்கவும்.
வெடிகளை தீக்குச்சிகளால் பற்றவைக்கக் கூடாது. நீண்ட ஊதுபத்திகளைப் பயன்படுத்துவது நலம்.
மூடிய பெட்டிகள், பாட்டில்கள், தேங்காய் மூடிகள் போன்றவற்றில் பட்டாசுகளைப் போட்டு வெடிக்கக் கூடாது.
குழந்தைகள் எப்போதும் பெற்றோரின் முன்னிலையில், அவர்களின் பாதுகாப்பின் கீழ்தான் பட்டாசு வெடிக்க வேண்டும்.
பட்டாசு வெடிக்கும்போது எப்போதும் ஒரு வாளி நீரை அருகே வைத்துக் கொள்ளுங்கள். மணல் இருந்தாலும் பயன்படும்.
பட்டாசு வெடிப்பவர்கள் கட்டாயம் காலணி அணிந்து கொள்ளுங்கள்.
கம்பிமத்தாப்பு போன்ற பட்டாசுகளைக் கொளுத்திய பின்னர், கம்பிகளை பத்திரமாக நீரில் போடவும்.
பட்டாசுகளைப் சட்டைப் பையில் வைக்க வேண்டாம். வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்க வேண்டாம்.
பட்டாசு வெடிக்கும் போது கதவு, ஜன்னல்களை மூடிவைப்பது நலம்.மீதமுள்ள பட்டாசுகளை பெட்டியில் வைத்து, பாதுகாப்பான இடங்களில் வைக்கவும். சமயலறை போன்ற இடங்களில் வைப்பதைத் தவிர்க்கவும்.

 

எங்கெல்லாம் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது?

விளையாட்டு மைதானம் போன்ற திறந்தவெளிப் பகுதிகளே பட்டாசு வெடிக்க உகந்தவை ஆகும். பிற பகுதிகளைத் தவிர்க்கவும்.
ராக்கெட் வெடிகளை, சுற்றிலும் குடிசைகள் இல்லாத பகுதிகளில் மட்டும் வெடிக்கவும்.
பட்டாசுக் கடைகள், மருத்துவமனைகள் அருகே பட்டாசு வெடிக்கக் கூடாது.
பெட்ரோல் நிலையங்கள், டிரான்ஸ்பார்மர்கள், கேஸ் குடோன்கள் ஆகியவற்றின் அருகேயும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.
மக்கள் நெருக்கடியுள்ள பகுதிகள், சாலைகள், தெருக்களில் பட்டாசுகள் வெடிப்பது விபத்துகளுக்கு வழி வகுக்கும்.
விலங்குகளை துன்புறுத்தும் வகையிலோ அச்சப்படுத்தும் வகையிலோ பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.
அதிக சத்தமுள்ள பட்டாசுகளைத் தவிர்க்கவும். அது வெடிப்பவருக்கும் கேடு, சூழலுக்கும் கேடு.
அரசு அனுமதித்த நேரங்களைத் தவிர பிற நேரங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது.

தீக்காயம் ஏற்பட்டால்…:

பட்டாசு வெடிக்கும் போது தீப்பற்றினால் உடனடியாக அதன் மீது குளிர்ந்த நீரை ஊற்றவும். தீப்பற்றும் போது ஓடுவது கூடாது.
தீப்பற்றிய இடத்தை தேய்ப்பது, கோணிப்பை போன்றவற்றை அதன் மீது போடுவது – ஆகியவை கூடாது.
நீரால் அணைக்கப்பட்ட தீக்காயம் மீது மெல்லிய துணியால் மட்டுமே மூடலாம்.
காயம் பட்டவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்.
கைவைத்தியங்கள் வேண்டாம். பின்னர் சிக்கலில் முடியலாம்.
தீக்காயங்கள் மீது பேனா இங்க், எண்ணெய் ஆகியவற்றை ஊற்றக் கூடாது.
அவசர உதவிக்கு 101-ஐ அழைக்கவும்.

Exit mobile version