தீக்காயங்களுடன் வருபவர்களுக்கு 24 மணி நேரமும் சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்புப் பிரிவு

தீபாவளியை முன்னிட்டு, தீக்காயங்களுடன் வருபவர்களுக்கு 24 மணி நேரமும் சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
பட்டாசு வெடிக்கும்போது எதிர்பாராதவிதமாக காயம் அடைபவர்களுக்கு முழுமையாக சிகிச்சை அளிப்பதற்கு தேவையான அனைத்து மருந்துகள், கட்டு போடுவதற்குத் தேவையான பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பட்டாசு கொளுத்தும்போது ஏற்படும் காயங்களைத் தவிர்ப்பதற்காக பாதுகாப்பு அறிவுரைகளையும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

சிறியவர்கள் பட்டாசு கொளுத்தும்போது பெரியவர்கள் உடனிருப்பது அவசியம் என்றும், பருத்தி துணிகளை அணிந்து பட்டாசு கொளுத்த வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. காலில் செருப்பு அணிந்து கொண்டு பட்டாசு கொளுத்தும் அதேநேரம், பக்கெட்டில் தண்ணீர் வைத்துக் கொள்வது அவசியம் எனவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

வெடிக்காத பட்டாசுகளை சிறியவர்கள் தொடக் கூடாது, மீதமுள்ள பட்டாசுகளை சேர்த்து எறிக்க கூடாது, தீக்காயத்தின் மீது எண்ணெய், மஞ்சள், பேனா மை உள்ளிட்டவைகளை தடவக் கூடாது போன்ற அறிவுரைகளையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Exit mobile version