புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வாகன உதிரிப்பாகங்கள் கடையில் தீப்பிடித்ததில் 70 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
அறந்தாங்கி கட்டுமாவடிச் சாலையில் ராமராஜன் என்பவருக்குச் சொந்தமான வாகன உதிரிப்பாகங்கள் கடை உள்ளது. வழக்கம் போல் வணிகத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவு ராமராஜன் கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார். இன்று காலை அவரது கடையிலிருந்து புகை வெளியே வந்துள்ளது. இதைப் பார்த்தவர்கள் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் ஆகிய ஊர்களில் இருந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்டநேரம் போராடித் தீயைக் கட்டுப்படுத்தினர். இந்தத் தீ விபத்தில் கடையிலிருந்த லாரி, ஆட்டோ, இருசக்கர வாகன உதிரிப்பாகங்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து அறந்தாங்கி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.