நாக்பூரில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து: 4 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர் மாவட்டம் கொரோனா அதிகளவு பாதித்த மாவட்டமாக உள்ளது. இங்கு, இதுவரை 2 லட்சத்து 66 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நாக்பூரில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனையில் நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் நேரிட்ட தீ விபத்தில் சிக்கி நான்கு நோயாளிகள் உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு சிகிச்சை பெற்று வந்த 27 நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர்.

இவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவு மையத்தில் குளிர்சாதன பெட்டியில் மின்கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Exit mobile version