தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்து கல்விக்குழு மூலம் சிறப்பு பயிற்சி வழங்கும் திட்டம் நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் தொடங்கியது.
பின்லாந்து கல்வி முறை பற்றி அறியவும், அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 10 நாள் அரசு முறைப்பயணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் பின்லாந்து நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்த 6 பேர் கொண்ட பின்லாந்து கல்விக்குழு சென்னை வந்தடைந்தது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசுப்பள்ளிகளை பார்வையிட்ட அந்த குழு, மாணவர்களின் கற்றல் முறையை மேம்படுத்துவது, பள்ளிக்கல்வியின் தரத்தை மேம்படுத்துவது உள்ளிட்டவை தொடர்பாக தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறது. நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் பின்லாந்து கல்விக்குழு மூலம் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 150 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு 6 பேர் கொண்ட பின்லாந்து கல்விக்குழு, கற்பித்தல் முறை குறித்து பயிற்சியை வழங்கி வருகிறது.