காணாமல் போன செல்போன்களை கண்டுப்பிடித்து உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில், கடந்த எட்டு மாதங்களில் தொலைந்து போன பொதுமக்களுடைய செல்போன்களை காவல்துறையினர் கண்டுப்பிடித்து, அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில், கடந்த எட்டு மாதங்களில் பல்வேறு இடங்களில் செல்போன்கள் காணாமல் போனது தொடர்பான புகார்கள் மீது தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் முடிவில், பொதுமக்களுடைய 12 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 101 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனையடுத்து புகார் கொடுத்த அனைவரும் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு, அவர்கள் பறிகொடுத்த செல்போன்கள், அவர்களிடமே வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ் தீவிர புலன் விசாரணை மேற்கொண்ட காவலர்களுக்கு ஊக்க பரிசுகளை வழங்கினார்.

இதேபோல் ,கொள்ளையடிக்கப்பட்ட செல்போன்களை வேறு மாநிலங்களிலிருந்து மீட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றது.

மயிலாப்பூர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காணாமல் போன செல்போன்களை, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுக்கு சைபர் கிரைம் தனிப்படை காவல்துறையினர் சென்று மீட்டனர். கடந்த 2018 – 2019 ஆம் ஆண்டில், காணாமல் போன சுமார் 130 செல்போன்கள் ஐஎம்இஐ எண்களை கொண்டு சைபர் கிரைம் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், மயிலாப்பூர் தனியார் மண்டபத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட செல்போனகள் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. துரிதமாக செயல்பட்டு செல்போன்களை மீட்ட காவல் துறையினருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version