கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு, வீடுகளுக்கும் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வழங்கப்படும் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புக்காக கடந்த 5 ஆண்டுகளில் 2 மடங்கு பணம் செலவு செய்யப்பட்டுள்ளதாக நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளில் இந்தியா, 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் கொண்ட பொருளாதார நாடாக உயரும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டபடி முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும், காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு அனுமதி வழங்கப்படும் என்றும், ஊடகம் மற்றும் விமான துறையில் அந்நிய நேரடி முதலீட்டை கொண்டு வருவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
ரயில்வே துறையில் தனியார் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என்றும், இதற்காக 2030-ம் ஆண்டுக்குள் ரயில்வே துறையில் 50 லட்சம் கோடி முதலீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாடு ஒரு மின்சார விநியோக தொகுப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
ஹர்கர் ஜல் என்ற திட்டம் உருவாக்கப்பட்டு, 2024-க்குள் நாட்டிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என்றும் மகாத்மா காந்தி பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ளும் வகையில் விக்கிபீடியா போல், காந்தி பீடியா உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாடு இந்தியா திட்டத்தின் கீழ் தேசிய விளையாட்டு கல்வி வாரியம் அமைக்கப்படும் என்றும், இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்கப்படும் என்றும், வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் கல்வி கற்க புதிய திட்டம் உருவாக்கப்படும் என்றும் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்கு குறைந்தபட்சம் 51 சதவீதமாக இருக்கும் என்றும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும் நிதி அமைச்சர் தெரிவித்தார்.
35 கோடி எல்இடி பல்புகள் உஜ்வாலா திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஏற்பட்ட மின்சிக்கனம் காரணமாக அரசுக்கு 18 ஆயிரத்து 341 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.
ராணுவ தளவாட இறக்குமதிக்கு சுங்க வரி கிடையாது என்றும், 80 ஆயிரத்து 250 கோடி செலவில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கிலோ மீட்டருக்கு சாலைகள் போடப்படும் என்றும், சிறு, குறு தொழில் வளர்ச்சிக்காக 350 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சகத்துக்கு நடப்பாண்டில் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 5 ஆயிரத்து 858 கோடி அதிகமாகும்.
பாதுகாப்புத் துறைக்கு 3 லட்சத்து 19 ஆயிரம் கோடியும், சுகாதாரத்துறைக்கு 62 ஆயிரம் கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.