தமிழக அரசின் தொடர்ச்சியான நடவடிக்கை காரணமாக கொரோனா நோய் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். முதலமைச்சர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா பரவாமல் தடுக்க எடுக்கப்பட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் 146 கோடி ரூபாய் செலவில் மருந்துகள் வாங்கப்பட்டதையும் குறிப்பிட்டார். பிரதமர், மாவட்ட ஆட்சியர்கள், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான குழுக்கள், மருத்துவக் குழுக்கள் உள்ளிட்டோருடன் பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு அதனடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வண்ணம் போர்க்கால அடிப்படையில் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டினார். அனைத்து மாவட்டங்களை நோய் பரவலை தடுப்பதற்கும் சிகிச்சை முறைகளை கண்காணிப்பதற்காகவும் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளடக்கிய 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த முதல்வர் தமிழக அரசிடம் போதுமான மருத்துவ உபகரணங்கள் மருந்துப் பொருட்கள் இருப்பில் உள்ளதாக தெரிவித்தார்.
காய்கறி விலைகள் அதிகமாகியுள்ளதாக எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களை தருவதாக முதலமைச்சர் குற்றம்சாட்டினார். மேலும் காய்கறிகளை குடியிருப்பு பகுதிகளுக்கே எடுத்துச் சென்று விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் அரசின் கண்காணிப்பில் உள்ள பகுதிகளில் அரசு ஊழியர்களே நேரில் சென்று பொருட்களை விநியோகம் செய்து வருவதாகவும், அத்தியாவசிய மளிகைக்பொருட்களான பூண்டு, சீரகம் உள்ளிட்டவற்றை வெளிமாநிலங்களில் கொள்முதல் செய்து வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.
தமிழகம் கொரோனா தொற்று பரவலில் 2 வது நிலையிலேயே உள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர் அடுத்த 2 நாட்களில் நோய் தொற்று முற்றிலும் குறையும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு எந்தெந்த தொழில்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்பது குறித்தும், மே 3 ல் ஊரடங்கு முடிந்த பிறகு படிப்படியாக தளர்வு அளிப்பது தொடர்பாகவும் ஆராய நிதித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்