செல்போன்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 39வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இதில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இயந்திரங்கள், மற்றும் கையால் செய்யப்பட்ட தீப்பெட்டிக்கு நியாயமான முறையிலேயே 12 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், ஐடிசி நிறுவனத்துடன் மேற்கொள்ளப்படும் விமான பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பு உள்ளிட்ட சேவைகளுக்கான ஜிஎஸ்டி விகிதம்18 சதவீதத்திலிருந்து 5 சதவீதம் வரை குறைக்க உள்ளதாகவும் தெரிவித்தார். அதேபோல், 2 கோடி ரூபாய்க்கும் கீழே வருவாய் உள்ள நிறுவனங்கள் வருமான அறிக்கை தாக்கல் செய்ய காலதாமதம் ஆனாலும் அபராதம் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் கூறியுள்ளார். மேலும், செல்போன்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளதாகவும் குறிப்ப்பிட்டுள்ளார்.
உரங்கள் மற்றும் ஆடைகள் தயாரிப்பு மூலப் பொருட்களின் ஜி.எஸ்.டி வரி உயர்வு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 39வது ஜி.எஸ்.டி குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தீப்பெட்டிக்கான ஜி.எஸ்.டி 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் குறித்து கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், திமுகவின் முந்தைய முறைகேடான ஆட்சி பற்றி தான் அவர் பேசியிருப்பார் என்று தெரிவித்தார்.