தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நான்காம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு தேர்வு எழுதிய மருத்துவ மாணவர்களை கோவிட் தடுப்பு பணியில் ஈடுபடுத்த மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 21 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மருத்துவர்கள் பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில், மூன்றாம் ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டு தேர்வு எழுதிய மருத்துவ மாணவர்களை, கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபடுத்த தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் அனுமதி வழங்கியுள்ளது.
லேசான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியிலும், தொலைபேசி மூலம் ஆலோசனை வழங்கும் பணியிலும், மாணவர்களை பணியமர்த்தலாம் எனவும் தனது சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் மூத்த மருத்துவர்களின் பணிச்சுமை குறைந்து, பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மருத்துவ இயக்ககத்தின் இந்த உத்தரவு மூலம், கூடுதலாக 7 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பு பணியில் பணியமர்த்தப்பட உள்ளனர்.