சீன அரசுக்கு எதிராக மீண்டும் ஹாங்காங்கில் போராட்டம்

சீன அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஹாங்காங்கில் மீண்டும் தீவிரம் அடைந்து உள்ளன. ஹாங்காங் காவல் அதிகாரி ஒருவரை போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொல்ல முயற்சிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. என்ன நடக்கிறது ஹாங்காங்கில்? – விளக்குகின்றது இந்தத் தொகுப்பு…

பிரிட்டனின் காலனி நாடாக இருந்த ஹாங்காங் கடந்த 1997ஆம் ஆண்டில்தான் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. உடனே இது சீன அரசின் சிறப்பு நிர்வாகப்பகுதிகளில் ஒன்றாக இணைக்கப்பட்டது. ஒருநாடு இரு கொள்கை – என்ற திட்டத்தின் கீழ் ஹாங்காங்கில் சீனாவின் பொதுவுடைமைக் கொள்கையோடு முந்தைய முதலாளித்துவக் கொள்கையும் கடைபிடிக்கப்படுகின்றன.

இங்கிலாந்தின் காலனி நாடாக இருந்த போது சுதந்திரமாக உணர்ந்த ஹாங்காங் மக்கள் சீனாவின் ஏகாதிபத்திய மனப்பான்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டனர், இதனால் சீனாவை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் ஹாங்காங்கில் நடந்தன. இந்த நிலையில், ஹாங்காங்கில்
கிரிமினல் வழக்குகளில் கைதாகும் நபர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, அங்கு விசாரிக்கும் விதமாக ’கைதிகள் பரிமாற்றச் சட்டத் திருத்தம்’ – என்ற ஒரு சட்டத்தைக் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது.

இதனை எதிர்த்து ஹாங்காங்கில் கடந்த ஜூன் மாதத்தில் லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். இதனால் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் போராட்டக்காரர்கள் அந்த மசோதாவை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி போராடினர். இதனால், கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெறுவதாக ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஆனாலும் மற்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சீனாவில் போராட்டங்கள் இன்னும் தொடர்கின்றன.

ஹாங்காங் போராட்டக்காரர்கள் முகமூடி அணிந்து போராடி வந்ததால், ’முகமூடி அணிந்து போராடத் தடை’ விதிக்கும் அவசரச் சட்டம் சமீபத்தில் ஹாங்காங்கில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு போராட்டங்கள் இன்னும் தீவிரமடைந்தன. கடைகள், வணிக வளாகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ரயில் சேவைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டன. இதைக் கட்டுப்படுத்த ஹாங்காங் காவல்துறையால் முடியவில்லை.

போராட்டத்தின்போது, கூட்டமாக சாலைகளில் சென்ற போராட்டக்காரர்கள், காரில் பயணித்த ஒரு காவல் அதிகாரியை தாக்கி, அவரை நெருப்பு வைத்துக் கொளுத்த முயற்சித்து உள்ளனர். இந்த வீடியோ ஹாங்காங் ஊடகங்களில் வெளியாகி, சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகின்றது.

ஹாங்காங் போராட்டக்காரர்களால் காவல்துறையினர் அச்சுறுத்தப்படும் நிலையானது, சீனாவிற்கு கிடைத்த மிகப் பெரிய நெருக்கடியாகப் பார்க்கப்படுகின்றது. ஹாங்காங்கில் தனது பிடியை இன்னும் இறுக்க சீனா மேற்கொண்ட முயற்சிகள், இப்போது ஹாங்காங்கை சீனாவின் சிம்ம சொப்பனமாக மாற்றி உள்ளன. இதனால் ஹாங்காங் போராட்டங்கள் மீண்டும் சர்வதேச கவனத்தைப் பெற்று உள்ளன.

Exit mobile version