மீண்டும் போராட்டக் களமாகின்றதா ஹாங்காங்? – செய்தி தொகுப்பு

ஹாங்காங்கில் மாவட்ட கவுன்சிலர் தேர்தல் முடிவடைந்த நிலையில், மீண்டும் போராட்டம் சூடுபிடித்துள்ளது. ஹாங்காங்கில் என்னதான் நடக்கிறது?

1997ஆம் ஆண்டு வரை பிரிட்டிஷ் காலனியாக இருந்த ஹாங்காங் நகரத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் சீனாவிடம் ஒப்படைத்தது. அதைத் தொடர்ந்து, ஹாங்காங்கில் அரைத் தன்னாட்சி முறை ஆட்சி தொடரப்பட்டது. அதாவது, ஹாங்காங்கின் ராணுவம், வெளியுறவு போன்ற சில துறைகளில் தலையிடும் உரிமையை சீனா பெற்றிருந்தது. தனி நாடு கோரிப் போராட்டங்கள் வெடிக்க, 2017ஆம் ஆண்டு ஹாங்காங்குக்கு எனத் தனித்தேர்தல் நடத்தப்பட்டு, ஹாங்காங் முழுமையான தனி நாடாக அறிவிக்கப்படும் என்று சீனா அறிவித்தது. ஆனால், தேர்தல் தேதிக்கு முன்னதாகவே, சீன அரசு கைகாட்டும் ஆட்கள் மட்டுமே ஹாங்காங் தேர்தலில் போட்டியிட முடியும் என்கிற சட்டத்தை 2014ஆம் ஆண்டு சீனா புகுத்தியது. ஹாங்காங்கில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களைச் சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க அனுமதிக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜூன் மாதம் போராட்டம் தொடங்கியது. ஹாங்காங் மக்கள் குடையுடன் வீதியில் இறங்கிக் `குடை’ போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மசோதாவை அரசு திரும்பப் பெற்றது. ஆனாலும், ஜனநாயக உரிமைகளை வலியுறுத்திப் போராட்டக்காரர்கள், பேரணிகளையும், ஆர்ப்பாட்டங்களையும் தொடர்ந்தனர். இதனால் கடந்த 6 மாதமாக ஹாங்காங்கில் அமைதி சீர்குலைந்தது. இந்த நிகழ்வு ஒட்டு மொத்த உலகையே ஹாங்காங்கின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.

இந்த நிலையில் ஹாங்காங்கில் மாவட்ட கவுன்சில் தேர்தல் முடிவடைந்ததுள்ளது. ஜனநாயக சார்பு கட்சி வேட்பாளர்கள் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றனர். தேர்தல் பரபரப்பு முடிந்ததும், போராட்டக்காரர்கள் நேற்று முதல் மீண்டும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். ஹாங்காங்கில் போராட்டம் மீண்டும் வலுத்து வருகிறது. போராட்டக்காரர்களை கலைப்பதற்காக காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினார்கள். முன்னதாக, தங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கும், அந்நாட்டு எம்பி.க்களுக்கும் போராட்டக்காரர்கள் ஒன்று திரண்டு நன்றி கூறினார்கள். ‘‘மாவட்ட கவுன்சில் தேர்தலில் சிறு வெற்றி கிடைத்த போதிலும், எதற்காக இந்தப் போராட்டத்தைத் தொடங்கினோம் என்பதை யாரும் மறக்கக் கூடாது, நமது 5 கோரிக்கைகளும் வெற்றி பெறும் வரை போராட்டத்தைத் தொடர வேண்டும்,’’ என மக்களுக்குப் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஏற்கெனவே போராட்டத்தை ஒடுக்க காவல்துறையினர் மக்கள் மீது தாக்குதல் நடத்தியற்கு ஹாங்காங் நிர்வாகத்தின் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என மனித உரிமை அமைப்பின் செயலாளர் மிச்சேல் பச்சலெட் வலியுறுத்தி இருந்தார். இதற்கு பதில் கூறிய சீன அரசு, ஐ.நா தேவையில்லாமல் தலையிடுவதாகவும் போராட்டக்காரர்களை ஊக்குவிப்பதாக இருப்பதாகவும் சீனா கூறியது. இந்த நிலையில் ஹாங்காங்கில் மீண்டும் போராட்டம் தொடங்கியிருப்பது உலக அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. ஹாங்காங்கில் அமைதி திரும்ப வேண்டும் எனபதே உலகத் தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது.

Exit mobile version