பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே கடுமையான வார்த்தையுத்தம்!

எஸ் வங்கி பிரச்சினை தொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே கடுமையான வார்த்தையுத்தம் ஏற்பட்டுள்ளது.

எஸ் வங்கியின் வீழ்ச்சி தொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரசின் ராகுல்காந்தி, பிரதமர் மோடியின் கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை அழித்து வருவதை இது காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். இதே போல  முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரமும், நிதி நிறுவனங்களை நிர்வகிக்கும் திறமை மத்திய அரசுக்கு இல்லை என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.  பாஜக ஆட்சிக்கு வந்த பின் இரண்டு வங்கிகள் திவாலாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக இணைய பிரிவு தலைவர் அமித்மால்வியா, இதற்கு பாஜக அரசு காரணமல்ல, காங்கிரசின் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தான் காரணம் என கூறியுள்ளார். . இந்திய வங்கிகளின் குழப்ப நிலைக்கு ப.சிதம்பரம் தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், எஸ் வங்கியில் முதலீடு செய்தவர்கள் கவலைப்பட வேண்டாம் எனவும், அவர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளதாகவும்  தெரிவித்தார்.. கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எஸ் வங்கியின் நிர்வாகத்தில் முறைகேடு தொடங்கி நடைபெற்று வந்தது கண்டறியப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார். இந்நிலையில் எஸ் வங்கித் தலைவர் ராணா கபூரின் குடும்ப திருமண நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் பங்கேற்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version