தாய்மை போற்றிய பெண் காவலருக்கு 'சூப்பர் சல்யூட்'

ஹைராபாத் நகரில் துப்பரவு பணியாளர் பெண் ஒருவர் தனது கைக்குழந்தையை அருகில் உள்ள ஒரு நபரிடம் கொடுத்துவிட்டு தண்ணீர் குடிக்கச் சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அந்த பெண் திரும்பாததால் அந்த நபர் பதற்றம் அடைந்தார். இந்நிலையில் குழந்தை அழத் தொடங்கியது. வேறுவழியின்றி அந்த நபர் அருகில் உள்ள அப்துல்கஞ்ச் காவல் நிலையத்திற்கு சென்று குழந்தையை ஒப்படைத்தார். அப்போது காவலில் இருந்த காவலர் ரவீந்திரனும் குழந்தையின் அழுகையை நிறுத்த முடியாமல் தவித்தார்.

நீண்ட நேரம் குழந்தை அழுது கொண்டியிருந்ததால் தனது மனைவிற்கு காவலர் ரவீந்திரன் போன் செய்தார். இதனையடுத்து, காவல் நிலையத்திற்கு வந்த காவலர் ரவீந்திரனின் மனைவி பிரியங்கா சற்றும் தாமதிக்காமல் அந்த குழந்தைக்கு தாய்ப்பாலூட்டி குழந்தையின் அழுகையை போக்கினார்.

மகப்பேறு கால விடுமுறையில் இருந்த பிரியங்காவும் ஒரு பெண் காவலவர் ஆவார். இதுகுறித்து அவர் கூறுகையில், அழுகையில் இருந்த குழந்தையின் பசியை ஆற்றியது ஒரு தாய்மை பண்பு, எந்த ஒரு தாயும் இதைத் தான் செய்திருப்பார்கள் என்றார். இவரது தாய்மை போற்றும் பண்பை பார்த்து அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் பிரியங்கா, கமிஷ்னர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளால் பாராட்டு பெற்றார். கைக் குழந்தையின் தாயும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு குழந்தை ஒப்படைக்கப்பட்டது. குழந்தையை கொடுத்த பின்பு, அந்த இடத்தை மறந்துவிட்டதாக கூறிய அந்த தாய், தானும் தன் குழந்தையைத் தேடி அலைந்ததாக கூறினார்.

Exit mobile version