முதலமைச்சர் மற்றும் விஐபிக்களின் வாகனங்கள் செல்லும் பகுதிகளில், பெண் போலீசாரை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டாம் என, முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்த நிலையில், அதனை மீறும் வகையில், முதலமைச்சர் செல்லும் பாதைகளில் மீண்டும் பெண் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவதை, கண்டும் காணாதது போல் இருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
கடந்த 13ஆம் தேதி முதல், நிதிநிலை அறிக்கை மற்றும் துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கான சட்டப்பேரவைக் கூட்டம், கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக தினமும் பலநூறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், சட்டப்பேரவை தொடங்கிய நாள் முதல், இன்று வரை, முதலமைச்சர் மற்றும் முக்கியஸ்தர்கள் செல்லும் பகுதிகளில், பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே, முதலமைச்சர் மற்றும் டிஜிபியின் உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், மீண்டும் பெண் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது முறையா என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், தான் வந்து செல்லக்கூடிய பாதைகளில் பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டு இருப்பதை, கண்டும் காணாதது போல் இருக்கும் ஸ்டாலினுக்கு, பொதுமக்களிடையே எதிர்ப்புகளும் வலுத்து வருகின்றன. ஏற்கனவே பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களில் போலீசாருக்கு விடுப்பு வழங்கப்படும் என்று அறிவித்து விட்டு, தற்போது வரை அமல்படுத்தாமல் இருப்பதால் மனம் நொந்து போயிருக்கும் காவலர்களுக்கு, இது மேலும் ஒரு குமுறலாக மாறியுள்ளது.