புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே, ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி இருந்ததை அறியாமல் காரில் சென்ற பெண் மருத்துவர், நீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மாலை முதல் பரவலாக பலத்த மழை பெய்ததால், பொம்மாடி மலையிலிருந்து தொடையூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள ரயில்வே தரைப்பாலத்தில் மழைநீர் முழுவதுமாக நிரம்பியது.
இதுகுறித்த எச்சரிக்கை எதுவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், அரசு மருத்துவமனை மருத்துவர் சிவகுமார் என்பவரது மனைவியான மருத்துவர் சத்யா, தனது மாமியாருடன் காரில் அந்த பாலத்தை கடந்து தொடையூர் கிராமத்திற்கு செல்ல முயன்றுள்ளார்.
இரவில் ரயில்வே தரைப்பாலத்தில் மழைநீர் தேங்கி இருப்பதை அறியாமல் சென்றதால், காரின் சைலன்சருக்குள் தண்ணீர்ப் புகுந்து பழுதடைந்தது.
இதனால் காரைவிட்டு வெளியேற இருவரும் முயன்று மாமியார் வெளியேறி நீச்சலடித்து கரை சேர்ந்துள்ளார்.
காரினுள் முழுவதும் தண்ணீர் புகுந்தவிட்ட நிலையில், சீட் பெல்ட் அணிந்திருந்த காரணத்தால் சத்யாவால் காரில் இருந்து வெளியேற முடியாமல், நீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தகவலறிந்த அப்பகுதி மக்கள் காரில் இருந்து மருத்துவர் சத்யாவின் சடலத்தை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து, தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, பொதுமக்கள் மழையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Discussion about this post