2020-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு

2020-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் இந்தாண்டு பத்ம விருது பெறுகின்றனர்.

2020-ம் ஆண்டில், மத்திய அரசின் உயரிய பத்ம விருதுகள் பெறுவோர் பட்டியலை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் பெர்னாண்டஸ், அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ், மேரி கோம் உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல, கோவாவின் மறைந்த முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர், பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்ளிட்ட 16 பேருக்கு பத்மபூஷன் விருதும், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான், நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்ட 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுப் பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், டி.வி.எஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசன் ஆகியோர் பத்மபூஷண் விருதும், சமூக சேவகர் எஸ்.ராமகிருஷ்ணன், நாகஸ்வர இசைக் கலைஞர்கள் காலீஷாபி மெஹபூப் மற்றும் ஷேக் மௌஹபூப் சுபானி உள்ளிட்டோர் பத்மஸ்ரீ விருதும் பெற உள்ளனர். 2020-ம் ஆண்டில், மொத்தமாக 141 பேருக்குப் பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளன. அவர்களில் 34 பேர் பெண்களாவர். மேலும், வெளிநாட்டவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் 18 பேருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இறப்புக்குப் பிறகான விருது 12 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version