மத்திய நிதிநிலை அறிக்கை – முக்கிய அம்சங்கள்…

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மின்சார வாகன உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. நடுத்தர வர்க்கத்தினரின் கனவை நினைவாக்கும் வகையில், குறைந்த விலையில் வீடு வாங்குபவர்களுக்கு வங்கி கடன் வட்டியில் சலுகையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

2019-20ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். வழக்கமாக பட்ஜெட் அறிக்கை சூட்கேஸில் கொண்டு வரப்படுவது மரபு. இந்த முறை புதிதாக அரசு சின்னம் பொறிக்கப்பட்ட பையில் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொண்டு வந்தார்.

நடுத்தர வர்க்கத்தினரின்சொந்த வீடு வாங்கும் கனவை நினைவாக்கும் வகையில், வங்கிக்கடன் பெற்று குறைந்த விலை வீடு வாங்கினால் வட்டியில் ஒன்றரை லட்சம் வரை வரி விலக்கு வழங்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம், 15 ஆண்டுக்கான வீட்டுக்கடன் பெறுவோருக்கு 7 லட்சம் வரை மிச்சப்படும்.

இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருவாய் உள்ளவர்களுக்கு வருமான வரி விலக்கு தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 முதல் 5 கோடி வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு, கூடுதலாக 3 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், 5 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் இருந்தால் கூடுதலாக 7 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தும் வகையில் அதற்கான சேவைக் கட்டணம் இல்லை என்றும், ரொக்க பரிவர்த்தனையைக் குறைக்க, ஒரு வங்கிக் கணக்கில் இருத்து ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ரொக்கம் எடுத்தால் 2 சதவீதம் வரிப் பிடித்தம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பான் கார்டு தேவைப்படும் இடங்களில் ஆதார் கார்டு பயன்படுத்தும் வசதி அமல்படுத்தப்படும் என்றும், வருமான வரி செலுத்த பான் கார்டு இல்லாதவர்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தலாம் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்வையற்றோரும் தெரிந்து கொள்ளும் வகையில் 1, 2, 5, 10 ரூபாய் புதிய நாணயங்கள் வெளியிடப்படும் என்றும், புதிதாக 20 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசு ஏற்படுத்தாத மின்சார மின்சார வாகன விற்பனையை ஊக்குவிக்க வங்கிக்கடன்பெற்று மின்சார வாகனம் வாங்கினால், ஒன்றரை லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படும் என்றும், மின்சார வாகனங்களின்குறிப்பிட்ட சில பாகங்களுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் உரையின் போது புறநானூற்றுப் பாடலை மேற்கோள்காட்டி வரி வசூலிப்பு முறைக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்விளக்கம் அளித்து தமிழில் பேசினார். இதற்கு வரவேற்பு தெரிவித்து உறுப்பினர்கள் அனைவரும் மேசையை தட்டி ஆரவாரம் செய்தனர்.

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை மேலும் எளிமையாக்கப்படும் என்றும், பாமாயில் இறக்குமதிக்கு அளித்த வரிச் சலுகை ரத்து செய்யப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித கழிவுகளை மனிதர்களே அள்ளுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க, கழிவுநீர் சுத்திகரிப்புக்கு ரோபோக்கள், இயந்திரங்கள் பயன்படுத்த படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 மணிக்கு தொடங்கிய பட்ஜெட் உரை, சுமார் இரண்டு மணி நேரம் நீடித்தது.

Exit mobile version