கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரிவிலக்கு வரம்பு முக்கிய விவாதபொருளாக இருந்தது. இந்நிலையில் வர உள்ள முழுமையான பட்ஜெட்டில் வருமான வரி வரம்பு உயர்த்தப்படுமா என்பது மீண்டும் பேசு பொருளாக மாறி இருக்கிறது. இது குறித்து இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்
கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று ’தனிநபர் வருமான வரிவிலக்கு வரம்பு உயர்த்தப்படுமா?’என்பது தான் . பல ஆண்டுகளாக தனிநபர் வருமான வரிவிலக்கு வரம்பு இரண்டரை லட்சமாகவே இருந்த நிலையில் அதை 5 லட்சமாக உயர்த்த மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். எனவே இடைக்கால பட்ஜெட்டில் அந்த வரம்பு உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
மக்களின் இந்தக் கோரிக்கையை அன்றைய மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் ஏற்றாலும், தனிநபர் வருமான வரிவிலக்கு வரம்பை அவர் நேரடியாக 5 லட்சமாக அறிவிக்காமல், ‘ஆண்டுக்கு 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு டாக்ஸ் ரிபெய்ட் எனப்படும் வரித் தள்ளுபடி உண்டு’ என்று மட்டுமே அறிவித்தார். அதாவது 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி உண்டு, ஆனால் அந்த வரி தள்ளுபடி செய்யப்படும் என்பதுதான் இதன் பொருளாகும்.
இந்நிலையில் வரும் முழு பட்ஜெட்டில் 5 லட்சத்திற்கும் கீழ் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரித் தள்ளுபடி என்று இல்லாமல், வரி விலக்கே அளிக்கப்பட வேண்டும் என்பது சாமானியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் சில பொருளாதார நிபுணர்கள், ’வரி விலக்கு இரண்டரை லட்சம் என்ற வரம்பில் இருந்து, 3 லட்சம் என்ற வரம்புக்கு உயர்த்தப்படவே வாய்ப்புகள் அதிகம்’ என்று கருத்து தெரிவித்து உள்ளனர். இதனால் தனிநபர் வருமான வரிவிலக்கு வரம்பு உயருமா? என்ற கேள்வி இடைக்கால பட்ஜெட்டைத் தொடர்ந்து முழு பட்ஜெட்டிலும் மீண்டும் எழுந்துள்ளது.