பட்ஜெட் 'அல்வா' ரகசியம் என்ன..? – "அல்வா கிண்டி ஆரம்பிக்கப்படும் மத்திய பட்ஜெட்"

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான இந்தியாவில், பல லட்சம் கோடிகள் புரளும் பட்ஜெட், அல்வா கிண்டும் நிகழ்வோடு ஆரம்பிக்கிறது.

இந்தியாவின் பட்ஜெட்டிற்கும் – அல்வாவிற்கும் அப்படி என்ன தொடர்பு? ஆச்சர்யம் மிக்க அல்வாவிற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அந்த ரகசியம் என்ன? விளக்குகிறது சிறப்புத் தொகுப்பு.

கோடிகளில் புரளும் தொழில்அதிபர்கள் முதல் மாதச்சம்பளம் வாங்கும் கடைக்கோடி குடிமகன்கள் வரை ஒட்டுமொத்த நாடுமே பட்ஜெட்டை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால், பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதித்துறை அமைச்சரோ அலுவலகத்தில் அல்வா கிண்டிக்கொண்டிருக்கிறார் என்று நாம் செய்திகளில் பார்க்கும்போது நம் எல்லாருக்குள்ளும் எழும் ஓர் கேள்வி…. அமைச்சருக்கும் அல்வாவுக்கும் என்ன சம்பந்தம் என்பதே…

பட்ஜெட்டை நிதிஅமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும்போது, அதன் நகல் அங்கிருக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்படும்.

எனவே, பட்ஜெட் தாக்கலுக்கு சிலநாட்கள் முன்னதாக பட்ஜெட், அச்சகத்திற்கு அனுப்பப்படும். அதன்பிறகு நிதிஅமைச்சகத்தின் நார்த் பிளாக்கில் அல்வா கிண்டும் நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்வில் பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகளுமே கலந்துகொள்வார்கள்.

மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் முக்கியமான ஓர் நடவடிக்கை பட்ஜெட் என்பதால், ரகசிய காப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பட்ஜெட், அச்சகத்திற்கு சென்ற பிறகு, நிதித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் 24 மணிநேரமும் பலத்த கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும் அவர்கள் யாருடனும் தொடர்பில் இருக்க கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும்.

பட்ஜெட் அச்சகத்திற்கு சென்று விட்டது என்பதை தெரிவிக்கும் நிகழ்வாகவும், எந்த ஒரு நல்ல நிகழ்வையும் இனிப்புடன் தொடங்கவேண்டும் என்ற காரணத்திற்காகவுமே நிதித்துறை அமைச்சகத்தின் சார்பில் பட்ஜெட்டிற்கு முன்பு அல்வா கிண்டப்படுகிறது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பேப்பர் பட்ஜெட்டிற்கு பதிலாக டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. எனவே, இந்த ஆண்டு அல்வா கிண்டும் நிகழ்வும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

நியூஸ் ஜெ செய்திகளுக்காக மனோஜ்குமார் கோபாலன்…

Exit mobile version