உயிர் பயம்… வீட்டுக்குள் முடக்கம்… சமூக விலகல்… ஆரோக்கியமான மன மாற்றம்!!!

உலகின் துயரமாக கொரோனா வைரஸ் மாறியிருந்தாலும், தனி மனிதர்கள் பலரிடம் ஆரோக்கியமான மன மாற்றத்தையும் அது ஏற்படுத்தி உள்ளது என்பதையும் மறுக்க முடியாது. ஈரோடு மாநகராட்சி பள்ளியில், தனியார் அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்படும் முகாமில், அப்படிப்பட்ட ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.  உயிர் பயம்… வீட்டுக்குள் முடக்கம்… சமூக விலகல்… என கொரோனா ஏற்படுத்திய தொல்லைகள் சொல்லில் அடங்காதவை. ஒரளவு உணவு, உடை, உறைவிடத்தில் தன்னிறைவு அடைந்தவர்களின் நிலையே இப்படி என்றால், வெளிமாநிலங்களில் இருந்து வேலைக்கு வந்தவர்கள், வீடில்லாமல் சாலையோரங்களில் வாழ்பவர்கள், ஏழை-எளிய மக்களின் பாடு இன்னும் திண்டாட்டமாக மாறியுள்ளது. இந்நிலையில், ஈரோட்டைச் சேர்ந்த, அட்சயம் அறக்கட்டளையினர் இவர்களைப் போன்ற ஆதரவற்றவர்களுக்கு உதவ முன்வந்தனர்.

வேளாவேளைக்கு உணவு கொடுத்தால் மட்டும் போதாது என்று கருதிய அட்சயம் அமைப்பினர், வெளிமாநிலத் தொழிலாளர்கள், சாலையோரங்களில் தங்கியிருந்தவர்கள், யாசகம் பெற்று வாழ்ந்து வந்தவர்கள் என 73 பேருக்கு அடைக்கலம் கொடுத்தது. மாநகராட்சி அனுமதியுடன் அவர்களை அழைத்து வந்து, ஈரோடு மாநகராட்சிப் பள்ளியில் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு, உடைகளையும் வழங்கி வருகிறது. அத்துடன், காலையில் கராத்தே பயிற்சியும், யோகா பயிற்சியும் வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சிகள் முடிந்தபிறகு, காலையில் குளித்து முடித்து சர்வமதப் பிராத்தனையுடன் காலை உணவு வழங்கப்படுகிறது. அதன்பின்னர், தொழிற்பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. மாலையில் கிரிக்கெட் போட்டி, சதுரங்கப் போட்டி, சாக்குப் போட்டி, உறியடிப் போட்டி என உற்சாகத்திற்காவும், உடல்-மன வலிமைக்காகவும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இரவில் பொழுதுபோக்குக்காக சில காணொலிக் காட்சிகள், இரவு உணவுக்குப் பிறகு திரைப்படம் காண்பிக்கப்படுகிறது. இதுபற்றி அங்கு தங்கியுள்ளவர்கள் குறிப்பிடும்போது, ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்போது, தாங்கள் தங்களது வீடுகளுக்குச் சென்றிருந்தாலும், இந்தளவுக்கு மகிழ்ச்சி, உணவு, இதுபோன்ற அனுபவம் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான் என்றும், இங்கு கிடைத்த அனுபவம் மற்றும் போதனைகள் மூலம் இதுவரை நிறுத்த முடியாத குடிப்பழக்கத்தை நிறுத்த முடிந்திருக்கிறது என்றும் மகிழ்ச்சி தெரிவித்தனர். கொரோனா வைரஸ் காரணமாக ஏராளமான தீமைகள் ஏற்பட்டிருந்தாலும், இதுபோன்ற சில நன்மைகள் ஏற்பட்டிருப்பதையும் நாம் மறுக்க முடியாது.

Exit mobile version