வடகிழக்கு பருவமழை துவங்க மூன்று நாட்களே உள்ள நிலையில், சாதகமான சூழ்நிலை நிலவுவதால் கணித்தபடி பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை வரும் 26ஆம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தென் மேற்கு பருவ காற்று திசை மாறி, கிழக்கில் இருந்து வீச துவங்கியுள்ளது. இதனால், பருவமழை கணித்தபடி துவங்கும் என,சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு பருவமழை, மே 29 முதல் அக்டோபர் 21 வரை 146 நாட்கள் பெய்துள்ளது. 91 சதவீதம் வரை மழை பெய்துள்ள நிலையில், தென் மாநிலங்களில் கூடுதலாக 3 சதவீதம் மழை பெய்து இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு பருவமழை காலத்தில், சாகர், மேகுனு, தயே, லூபன் மற்றும் தித்லி ஆகிய ஐந்து புயல்களும், ஐந்து காற்றழுத்த தாழ்வு மண்டலங்களும் உருவாகின. தற்போது காற்றின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், கணித்தபடி வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை மையம் கூறியுள்ளது.