நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் தனுஷ் மற்றும் அவரது தந்தையை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக தனுஷ் என்ற மாணவரையும் அவரது தந்தை தேவேந்திரன் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இவர்கள் பெங்களூருவில் உள்ள தனியார் பயிற்சி மையத்தின் இடைத்தரகரிடம் 15 லட்ச ரூபாய் கொடுத்து, பீகாரில் தேர்வு எழுதி முறைகேடாக தேர்ச்சி பெற்றுள்ளனர். முறைகேடாக தேர்ச்சி பெற்ற மாணவர் தனுஷ், அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படித்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, கடந்த 2018-ஆம் ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற இரண்டாயிரத்து 500 மாணவர்கள் பற்றிய விவரங்களை சரிபார்க்க, மருத்துவ கல்லூரி இயக்குனரகத்திற்கு சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள மாணவர் தனுஷ் மற்றும் அவரது தந்தை தேவேந்திரனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை அடுத்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.